கன்னியாகுமரிக்கு நாளை வருகை: ஜனாதிபதி தனிபடகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரியில் நடைபெறும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை (புதன்கிழமை) வருகிறார். அங்கு தனிபடகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார்.
கன்னியாகுமரிக்கு நாளை வருகை: ஜனாதிபதி தனிபடகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் கடந்த 1970-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த மண்டபத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியை இந்த வருடம் முழுவதும் கொண்டாட விவேகானந்த கேந்திரா நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பொன்விழா நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறது.

ஜனாதிபதி நாளை வருகை

இந்தநிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சி 26-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மதியம் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அப்போது அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தனி படகில் பயணம்

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனி படகு மூலம் கடலில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். அங்கு ஸ்ரீ பாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபத்தை பார்வையிடும் அவர், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்களுக்கான புத்தகத்தில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

26-ந் தேதி காலை 9.30 மணிக்கு விவேகானந்த கேந்திர ஏக்நாத் ரானடே அரங்கில் நடைபெறும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

மாணவிகளுடன் கலந்துரையாடல்

மேலும் கேந்திர பள்ளியில் படிக்கும் 80 மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். முன்னதாக அவருக்கு கேந்திர நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

இந்த தகவலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, விவேகானந்த கேந்திரா செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் தெரிவித்தார். அப்போது, விவேகானந்த கேந்திரா மூத்த ஆயுட்கால ஊழியர் அங்கிராஸ், தலைமை அலுவலக செயலாளர் நந்தன் குல்கர்னி, மக்கள் தொடர்பு அதிகாரி ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. அதாவது, கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அந்த தளத்தில் இறங்கி சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடந்தது.

இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்குமிடம், அவர் செல்லும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவேகானந்த மண்டப பொன்விழா நிகழ்ச்சி நடைபெறும் விவேகானந்த கேந்திராவில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com