வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்; நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு

வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்; நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு
Published on

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்

சென்னை திருமங்கலம் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற லாரிகள், இருசக்கர வாகனங்களை மறித்து சோதனையிட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தகுந்த ஆவணங்கள் இருந்தாலும் வாகன ஓட்டிகளிடம் அவர், வலுக்கட்டாயமாக பணம் வாங்கியதாக தெரிகிறது. போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் காட்சியை அந்த வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

வைரலான வீடியோ

அந்த வீடியோ, தற்போது வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் மோட்டார்சைக்கிள் மீது ஒரு காலை தூக்கி வைத்தபடி நிற்கும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், 2 பேரிடம் வாக்குவாதம் செய்வதும், தொடர்ந்து அவர் பிடிவாதமாக இருப்பதால் வேறு வழியின்றி 2 பேரில் ஒருவர் தன்னிடம் இருந்த பணத்தை லஞ்சமாக கொடுக்க, அதனை வாங்கும் சப்-இன்ஸ்பெக்டர், யாரும் பார்க்கிறார்களா? என சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடியே அந்த பணத்தை தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. வாகன ஓட்டிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் வீடியோ போக்குவரத்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. அவர்கள், இந்த வீடியோவில் உள்ள உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் லஞ்சம் வாங்கியது உறுதியானால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com