தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் குப்பை வரியாக மாதம் ரூ.1,000 வசூலிப்பதாக புகார்

தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளிடம் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குப்பை வரியாக மாதம் ரூ.1,000 வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் குப்பை வரியாக மாதம் ரூ.1,000 வசூலிப்பதாக புகார்
Published on

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் எஸ்.சிவராசு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சி தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் சம்சுதீன் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சண்முகம், அம்சவள்ளி, வினோத், ஜெயபாரதி உள்ளிட்டவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து திருவெறும்பூர் பகுதிவரை உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வருகிறார்கள். சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அதிகாரிகள் தேவையான ஆவணங்கள் பெற்று நேரடி விசாரணை நடத்தி உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால், அடையாள அட்டை இன்னமும் வழங்கப்படவில்லை. தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் வாழ்வாதார பிரச்சினையில் மத்திய அரசின் சட்டமும், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை.

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைக்கு வரியாக மாதந்தோறும் ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளது. அன்றாட பிழைப்பு நடத்துவதே கஷ்டமான சூழ்நிலையில், வட்டிக்கு வாங்கி பிழைப்பு நடத்த வேண்டியதுள்ளது. எனவே, ரூ.1,000 வரி என்பது தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை மோசமான சூழலில் தள்ளிவிடும். எனவே, வரியை ரத்து செய்து வியாபாரிகள் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த குமார், கழுத்தில் கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்தபடி அப்பகுதி மக்களுடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா கேட்டு அலைந்து கொண்டிருக்கிறோம். பன்னையாபுரம், உத்தமசேரி பகுதியில் நடந்த சிறப்பு முகாமில் இலவச மனை கேட்டு 43 குடும்பங்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, மனைப்பட்டா விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என கூறப்பட்டுள்ளது.

ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் நவநீதன், குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில், மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை. 7-வது ஊதியக்குழு ஊதிய நிலுவையில் வழங்கப்படவில்லை. இதனால், சம்பளம் இன்றி டேங்க ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சம்பளம் வங்கி மூலம் இ.சி.எஸ். முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இனி ஊராட்சி தலைவர்கள் மூலம் வழங்கப்படுமா? அல்லது ஊராட்சி உதவி இயக்குனர் மூலம் வழங்கப்படுமா? என்ற குழப்பம் உள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டது. கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புதிய தலைவர்கள் என்ன முடிவெடுக்கபோகிறார்கள் என்ற குழப்பமும் உள்ளது. எனவே, விரைவில் தீர்வுகாண வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com