திருக்கோவிலூரில் துணிகரம், வீரட்டானேஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து, 4 உண்டியல்களில் பணம் கொள்ளை

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து 4 உண்டியல்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன்சிலைகள் தப்பியது. இந்த துணிகர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
திருக்கோவிலூரில் துணிகரம், வீரட்டானேஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து, 4 உண்டியல்களில் பணம் கொள்ளை
Published on

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற சிவானந்தவள்ளி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று இரவு 3 இளைஞர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 4 உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

4 உண்டியல்களிலும் உள்ள சில்லறை காசுகளை மூட்டைகளாக கட்டி தூக்கி செல்ல முயற்சித்து இருக்கின்றனர். ஆனால் தூக்க முடியாததால் சுற்றுசுவர் ஓரமாக சில்லரை காசு மூட்டைகளை போட்டு விட்டுவிட்டனர். சன்னதி எதிரே உள்ள உண்டியலில் சில்லரை காசுகள் அப்படியே உள்ளது. மேலும் சன்னதியில் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயற்சி செய்து முடியாமல் போகவே அதில் இருந்த பணம், நகை தப்பியது.

அதேப்போல் கோவில் உள்ளே தனிஅறையில் வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன்சிலைகள் தப்பின.

நேற்று மார்கழி மாத பிறப்பு என்பதால் அர்ச்சகர்கள் காலை 4.30 மணிக்கு கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவிலின் பிரதான கதவை திறந்த போது உள்ளே உள்ள கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் அர்ச்சகர்கள் கூறியதை தொடர்ந்து இத்தகவல் காட்டுத்தீபோல பரவியதால், ஊர்மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன், செந்தில்வாசன் மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரனை நடத்தினார்கள்.

விசாரனையில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது 2 இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கட்டிங் மிஷின் கொண்டு வந்து ஜன்னல் கம்பிகளை அறுத்துள்ளதும் தெரியவந்தது.

சமையல் கூடத்தையும் உடைத்துள்ள கொள்ளையர்கள் அங்கும் ஏதேனும் பொருட்கள் இருக்கின்றதா? என பார்த்துள்ளனர். கோவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நேற்று இரவே கோவில் வளாகத்தில் தங்கியிருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சரியாக நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணிஅளவில் உண்டியல் பணத்துடன் கொள்ளையர்கள் கோவிலின் பக்கவாட்டில் உள்ள தீர்த்தவாரி கதவு வழியாக வெளியேறியுள்ளனர்.

கொள்ளை நடந்த கோவிலை மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ், செயல் அதிகாரி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com