மாநில மக்களிடம் சொன்னபடி நடந்து கொள்வோம் நம்பிக்கை வாக்கெடுப்பு, நாளை திட்டமிட்டபடி நடைபெறும் தினேஷ் குண்டுராவ் பேட்டி

மாநில மக்களிடம் சொன்னபடி நடந்து கொள்வோம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி நடை பெறும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
மாநில மக்களிடம் சொன்னபடி நடந்து கொள்வோம் நம்பிக்கை வாக்கெடுப்பு, நாளை திட்டமிட்டபடி நடைபெறும் தினேஷ் குண்டுராவ் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி அரசில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளைக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாளையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும், அதனை வருகிற 24-ந் தேதிக்கு கொண்டு செல்ல கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று பா.ஜனதாவினர் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி தான் அறிவித்தார். பா.ஜனதாவினர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலில் வலியுறுத்தவில்லை. அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் தான் முதல்-மந்திரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று கூறி இருந்தார். 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் கொறடா உத்தரவு பற்றி சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பில் தெளிவாக இல்லை. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் குழப்பம் உண்டானது.

அதனால் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சென்றுள்ளது. இந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூற உள்ளது. அதே நாளில் தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூட்டணி தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். நாங்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ரமேஷ்குமாரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதனால் வருகிற 22-ந் தேதி(அதாவது நாளை) திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். சட்டசபையில் சபாநாயகருக்கு கொடுத்த வாக்குறுதி மாநில மக்களிடம் கொடுத்ததாகும். மாநில மக்களிடம் சரியான தகவலை தெரிவிக்க வேண்டும். மக்களிடம் சொன்னபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அதிகாரத்திற்காக நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட நாங்கள் விரும்பவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வருவார்கள். கூட்டணி அரசை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. ஆபரேஷன் தாமரை மூலம் குதிரை பேரத்தில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ.வுக்கு நெஞ்சுவலி என்று கூறி பெங்களூருவில் இருந்து மும்பைக்கு அழைத்து சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஸ்ரீமந்த் பட்டீலுக்கு மும்பை போலீசார் எதற்காக பாதுகாப்பு அளிக்க வேண்டும். நாட்டில் எதிர்க்கட்சிகளை அழிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது. நாட்டில் ஒரே கட்சி, ஒருவருக்கே அதிகாரம் என்று பா.ஜனதாவினர் நினைப்பதால் எதிர்க்கட்சிகளை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com