கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. தற்போது அணை உள்ள பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து அதிகப்படியாக வரும் தண்ணீரை திறந்து விட ஆந்திர மாநில அதிகாரிகள் முடிவு செய்தனர். மதியம் 2 மணி அளவில் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இது வழக்கமான தண்ணீரை விட 3 மடங்கு அதிகம் ஆகும். இது குறித்து அவர்கள் தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தனர். உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுகுறித்து கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்து தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.

900 கனஅடி தண்ணீர் திறப்பு

மேலும் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் உள்ள கீழ்கால்பட்டடை, சாமந்தவாடா, நெடியம் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்கள் அருகே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி நடக்காமல் இருக்க போலீசாரை காவலுக்கு ஏற்பாடு செய்தனர். கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து மதியம் 2 மணிக்கு அணையின் 2 ஷர்ட்டர்கள் திறக்கப்பட்டு 900 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் விடப்பட்டது.

இதனால் ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதியை மதியம் 3 மணி அளவில் கடந்தது.

இதனால் நெடியம், சாமந்தவாடா, கீழ்கால் பட்டடை போன்ற பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த பகுதிகளில் பொதுமக்கள் யாரும் தரைப்பாலத்தை கடக்காமல் இருக்க தடுப்புகள் அமைத்து போலீசார் பொதுமக்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com