மராத்தா இடஒதுக்கீடு அமைதி போராட்டம் வன்முறைக்கு மாறியது ஏன்? - பரபரப்பு தகவல்கள்

கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மராத்தா சமுதாயத்தினர் நாலச்சோப்ரா- அகோலா சாலையில் டயரை கொளுத்திப்போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
மராத்தா இடஒதுக்கீடு அமைதி போராட்டம் வன்முறைக்கு மாறியது ஏன்? - பரபரப்பு தகவல்கள்
Published on

மும்பை,

மராத்தா சமுதாய இடஒதுக்கீடு அமைதி போராட்டம் வன்முறைக்கு மாறியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மராட்டியத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்துக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியும் தீர்வு கிடைக்கவில்லை. இது குறித்து மீண்டும் மராட்டிய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏற்படுத்தவும், அதன் மூலம் மராத்தா சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இடஒதுக்கீடு கோரி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மராத்தா சமுதாயத்தினர் மாநிலம் முழுவதும் பல கட்டமாக அமைதி பேரணிகளை நடத்தினர். பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட போதிலும் வன்முறை நிகழாததால், மராத்தா சமுதாயத்தினரின் பேரணி தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் பீட் மாவட்டம் பார்லியில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு தரப்பில் யாரும் அவர்களை சந்தித்து பேசவில்லை.

இது அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் கலந்துகொள்ள பண்டர்பூர் வரும்போது, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதையடுத்து, 10 லட்சம் பக்தர்கள் திரளும் கூட்டத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக தனது பண்டர்பூர் பயணத்தை முதல்-மந்திரி பட்னாவிஸ் ரத்து செய்தார். மாநில மந்திரிகள் 2 பேர் சில அரசியல் கட்சியின் துணையுடன் மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர்.

மேற்கண்ட நிகழ்வுகள் தான் மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் தீவிரமடைந்து வன்முறைக்கு மாறியதற்கு காரணமாகி விட்டது என மராத்தா கிராந்தி மோர்ச்சா இணை ஒருங்கிணைப்பாளர் பிரவின் கெய்க்வாட் கூறினார். மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரது கருத்துகளையும் கேட்க வேண்டும் என அகில பாரதிய மராத்தா மகாசங்க பொதுச் செயலாளர் ராஜேந்திர கோந்தாரே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com