உலக மகளிர் தினத்தையொட்டி ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் நியமனம்

உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் இருந்து சென்னை சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டனர்.
உலக மகளிர் தினத்தையொட்டி ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் நியமனம்
Published on

திருச்சி,

மார்ச்-8 சர்வதேச மகளிர் தினமாகும். இதனையொட்டி உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அரசு துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்றி வருவதால் நேற்றைய தினம் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடத்தப்பட்டன.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமானம் முழுக்க முழுக்க பெண்களாலேயே இயக்கப்பட்டது.

பெண் டிக்கெட் பரிசோதகர்கள்

தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டமும் உலக மகளிர் தினத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு சிறப்பு நடவடிக்கையை எடுத்தது. திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 10.40 மணிக்கு புறப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் பெண் டிக்கெட் பரி சோதகர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில் கேப்டன் எனப்படும் தலைமை டிக்கெட் பரிசோதகரையும் சேர்த்து மொத்தம் 9 பேர் பணியில் இருப்பார்கள்.

கேப்டன் ஜெயந்தி தலைமையில் புஷ்பலதா, பிரீத்தி, ஆரோக்கியமேரி, லீலாவதி, வசுதா, பவித்ரா, சுமன், குமாரி ஆகிய 9 பெண் டிக்கெட் பரிசோதகர்களும் நேற்று மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்களது பணியை தொடங்கினார்கள். டிக்கெட் பரிசோதகருக்குரிய சீருடை அணிந்து இருந்த அவர்களை திருச்சி கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் அருண் தாமஸ் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். மூத்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அவர்களது பணி சிறக்க பேனா செட் கொடுத்து வாழ்த்தினார்.

சிறப்பாக செய்ய முடியும்

இது தொடர்பாக ரெயில் கேப்டன் ஜெயந்தி தினத்தந்தி நிருபரிடம் கூறுகையில், வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு பெண்கள் மட்டுமே மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் பணியில் இருப்பார்கள். உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களை கவுரவிக்கும் வகையில் அனைத்து பெட்டிகளிலும் டிக்கெட் பரிசோதனை செய்யும் பணியை எங்களுக்கு வழங்கிய உயர் அதிகாரிகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பெண்களால் எந்த பணியையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். நாங்கள் அனைவரும் நாளை (அதாவது இன்று) மாலை சென்னையில் இருந்து காரைக்குடிக்கு புறப்படும் பல்லவன் எக்ஸ் பிரஸ் ரெயிலில் திருச்சி வரை மீண்டும் எங்கள் பணியை தொடர்வோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com