ராஜபாளையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மகன், மகளுடன் தொழிலாளி பலி; மோட்டார் சைக்கிளில் சென்ற போது டிராக்டரை முந்த முயன்றதால் விபரீதம்

மோட்டார் சைக்கிளில் சென்ற போது டிராக்டரை முந்த முயன்றதால் பஸ் சக்கரத்தில் சிக்கி மகன், மகளுடன் தொழிலாளி பலியானார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான கணபதி, கமலேஷ், குஷிகா; உயிரிழப்புக்கு காரணமான பஸ்
பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான கணபதி, கமலேஷ், குஷிகா; உயிரிழப்புக்கு காரணமான பஸ்
Published on

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தந்தை, மகன்-மகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி காயத்ரி.

இவர்களுடைய மகன் கமலேஷ் (9), மகள் குஷிகா (8). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். மகன், மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று காலையில் அவர்கள் இருவரையும் கணபதி தனது, மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் பிள்ளைகளுக்கு உணவு, மருந்துகளை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்து காண்டு இருந்தார். சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெரியாதிகுளம் அருகே அவர்களது மோட்டார் சைக்கிள் வந்த போது, முன்னால் ஒரு டிராக்டர் சென்றது. அதனை கணபதி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே ஒரு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ்சின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

இதில் கணபதி, அவருடைய மகன், மகள் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி தந்தையும், மகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பஸ் நிலைதடுமாறி சாலையோர கால்வாயில் இறங்கி நின்றது.

தலையில் பலத்த காயங்களுடன் சிறுவன் கமலேஷ் உயிருக்கு போராடினான். உடனே அவனை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிசிக்சை பலனின்றி கமலேஷ் உயிரிழந்தான்.

டிரைவர் கைது

சம்பவ இடத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அரசு பஸ் டிரைவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (46) கைது செய்யப்பட்டார்.

விபத்தில் தந்தை, மகன், மகள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com