டெல்லி: பள்ளிகள், மருத்துவமனைகளை அடுத்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு இதற்கு முன் இ-மெயில் வழியே இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
டெல்லி: பள்ளிகள், மருத்துவமனைகளை அடுத்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள திகார் சிறையில் முக்கிய அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு பிரமுகர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், திகார் சிறைக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இன்று வந்துள்ளது. இதனால், சிறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, டெல்லி போலீசுக்கு இந்த மிரட்டல் பற்றி சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. உடனே சிறைக்குள் போலீசார் சோதனை நடத்தினர்.

இதுவரை வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கு முன், டெல்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் வழியே இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

டெல்லியில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்ஜ்வார் மருத்துவமனை மற்றும் தீப் சந்திரா பந்து மருத்துவமனை என 4 மருத்துவமனைகளிடம் இருந்து, டெல்லி தீயணைப்பு துறையினருக்கு இந்த மிரட்டல் பற்றிய தகவல் சென்றது.

உடனடியாக, வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படை, வெடிகுண்டு கண்டறியும் குழு, தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்று கிழமை (மே 12) டெல்லியில் உள்ள 20 மருத்துவமனைகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. இதே நாளில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் மிரட்டல் செய்தி வந்தது. எனினும், இவை அனைத்தும் புரளி என பின்னர் தெரிய வந்தது.

கடந்த 1-ந்தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகள், நொய்டா நகரில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு பள்ளி ஆகியவற்றிற்கு மிரட்டல்கள் விடப்பட்டன. ரஷிய இ-மெயில் சேவையை பயன்படுத்தி இந்த மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள 37 பள்ளிகளுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி நடந்த சோதனையில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com