புகை அழகுக்கு பகை

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களே வயதான தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.
புகை அழகுக்கு பகை
Published on

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த உணவுகளை சாப்பிடுவது சுருக்கங்களை தடுக்கும். இளமையாக தோன்ற விரும்புபவர்கள் குளிர்பானங்கள், ஜூஸ் போன்ற திரவ உணவு வகைகளை பருகுவதற்கு ஸ்ட்ராக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவைகளை கொண்டு உறிஞ்சும் போது உதடுகளை சுற்றியுள்ள கோடுகளுக்குபாதிப்பு நேரும். முகத்திலும் சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு விரைவாகவே சரும சுருக்கம் ஏற்படும்.

தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தூங்குவதை பழக்கமாக கொண்டிருந்தால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். மல்லாந்து படுத்து தூங்குவதே நல்லது. முதுகெலும்பு வளையும் அளவிற்கு சாய்ந்தவாறு உட்கார்ந்து லேப்டாப் பார்ப்பது, வேலை செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதன் தாக்கமாக வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. அவற்றில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேவேளையில் தினமும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போதும், வெயில் அதிகமாக சருமத்தில் படும்போதும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதுமானது.

குளிர்காலத்தில் நெருப்பை பற்ற வைத்து அருகில் அதிக நேரம் அமர்ந்திருப்பதும் கூடாது. செயற்கையாக உருவாக்கப்படும் அத்தகைய வெப்பம் சருமத்தையும், கூந்தலையும் வறட்சிக்குள்ளாக்கிவிடும். சரும சுருக்கத்திற்கும் வழிவகுத்துவிடும். மிதமான சூடுதான் சருமத்திற்கு நல்லது.

குளித்துமுடித்த பிறகு ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைப்பதாக இருந்தால் 6 அங்குலம் இடைவெளி விட்டே உலர்த்த வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பாதிப்புக்குள்ளாகிவிடும். அதுவும் வயதான தோற்ற பொலிவுக்கு காரணமாகிவிடும்.

சாப்பிடும் உணவுகள், பலகாரங்களில் சர்க்கரை அதிகம் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்கும் நேரம் குறைவதால் சோர்வு ஏற்படுவதோடு ஆயுளும் குறையும்.

மன அழுத்த பாதிப்பும் வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com