காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: வெளியேற முடியாமல் சிக்கி தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு

ஜம்மு -காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: வெளியேற முடியாமல் சிக்கி தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ‘சில்லாய் கலான்’ என்ற பனிப்பொழிவு காலம் நடைபெற்று வருகிறது. இதனால் காஷ்மீர் முழுவதும் வெண்பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர், புத்காம், பாராமுல்லா, குப்வாரா, சோபியான், புல்வாமா, பந்திபோரா உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

அதே சமயம் உயரமான மலைப்பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்கிறது. பனிப்பொழிவு காரணமாக சோனாமார்க், குல்மார்க், பஹல்காம் போன்ற சுற்றுலா தலங்கள் குளிர்கால அதிசய உலகங்களாக மாறி உள்ளன.

இந்தநிலையில், தோடா மாவட்டத்தில் பெய்த கடந்த ஜன. 23 சுமார் 40 மணி நேரம் நீடித்த பனிப்பொழிவால், அம்மாவட்டத்தை இணைக்கும் சாலைகளில் 38 கி.மீ. தொலைவுக்கு சுமார் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கடல்மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதேர்கலா பாஸ் பகுதிகளிருந்து வெளியேற முடியாமல் ராஷ்டிரீய ரைபில்ஸ் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 40 வீரர்கள் உள்பட மொத்தம் 60 பேர் தவித்தனர்.

தகவலறிந்து அவர்கள் அனைவரையும் மீட்கும் பணியில், எல்லையோரச் சாலைகள் அமைப்பான பிஆர்ஓ குழுவினர் கடந்த ஜன. 24 தொடங்கி இரு நாள்களாக ஈடுபட்டனர். இந்த நிலையில், மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், சாலைகளில் தேங்கியிருந்த பனி அகற்றப்பட்டு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு -காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மோசமான வானிலையால், ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com