பாகிஸ்தானில் 3-வது காலாண்டில் 46 சதவீதம் வன்முறை அதிகரிப்பு


பாகிஸ்தானில் 3-வது காலாண்டில் 46 சதவீதம் வன்முறை அதிகரிப்பு
x

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் நடப்பு ஆண்டில் இதுவரை 2,546 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த செவ்வாய் கிழமை குவெட்டா அருகே நடந்த தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் இந்த ஆண்டின் 3-வது காலாண்டில் ஒட்டுமொத்தத்தில் வன்முறை சம்பவங்கள் 46 சதவீதம் அதிகரித்து உள்ளன.

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை தடுக்கும் எதிர் தாக்குதல்கள் உள்பட மொத்தம் 329 வன்முறை சம்பவங்கள் நடந்து அவற்றில் 901 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 599 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த உயிரிழப்புகளில் 516 பேர் (57 சதவீதம்) குற்றவாளிகள், மற்ற 385 பேரில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அடக்கம். 2024-ம் ஆண்டில் வன்முறை சம்பவங்களில் மொத்தம் 2,414 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 2,546 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

வன்முறை சம்பவங்களில் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்த வன்முறையில் 96 சதவீதத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் இந்த இரு மாகாணங்களிலும் பதிவாகி உள்ளன.

1 More update

Next Story