ஆனி திருமஞ்சன விழா: நடராஜருக்கு மகா அபிஷேகம்.. கண்குளிர தரிசனம் செய்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற மகா அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Published on

சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் ஆனித் திருமஞ்சன விழா முக்கியமான வைபவமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்வாக, ஆனி உத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகத்தை ஆனி திருமஞ்சனம் என்கிறோம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனித் திருமஞ்சன விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆனி திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கண்குளிர தரிசனம் செய்தனர்.

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி முதல் விமரிசையாக நடைபெற்று வருகிறது- தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிழக்கு ரத வீதியில் இருந்து புறப்பட்ட 5 தேர்களும் கீழரதவீதி, தெற்கு, மேற்கு வடக்கு ரத வீதிகள் வழியாக வலம்வந்து இரவு 8 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சனம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. காலை 10 மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com