சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே கருவறையில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானே உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. விழாவின் ஒன்பதாவது நாளான இன்று ஆனித் திருமஞ்சன தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது.

மற்ற கோவில்களில் மூலவர் கருவறையில் வீற்றிருக்க உற்சவர் தேரில் வீதியுலா வருவது வழக்கம். சிதம்பரம் நடராஜபெருமான் கோவிலில் மட்டுமே கருவறையில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானே உற்சவராக தேரில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.

தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட 5 தனித்தனி தேர்களில் எழுந்தருள, சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேர் புறப்பாடாகி அதனை தொடர்ந்து முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் தேர்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்காண பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரத வீதிகளின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். இன்று மாலைக்குள் தேர்கள் நான்கு மாட வீதிகளை வலம் வந்து நிலையினை அடையும்.

அதனைத் தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் தேரில் இருந்து கீழே இறக்கப்பட்டு கோவில் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து பூஜைகள் செய்யப்படும். நாளை மதியம் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com