அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை நாளில் லட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு
Published on

இந்துக்களின் புனித தினமாக கருதப்படும் அட்சய திருதியை 30.4.2025 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களை தரும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு நன்மை பயக்கும்.

அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜைக்கு தயாராக வேண்டும். பூஜை அறையில் சாமி படங்களுக்கு முன்பாக தரையில் கோலமிடவேண்டும். பூஜை அறை இல்லாவிட்டால், வழக்கமான பூஜை செய்யும் இடத்தில் கோலமிடவேண்டும். லட்சுமி நாராயணர், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும்.

பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்து அதன் மீது கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள் போடவும். பொன் மற்றும் சிறிய நகைகள் இருந்தாலும் போடலாம். சொம்பில் சந்தனம், குங்குமம் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும். கலசத்திற்கு முன் மற்றொரு கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம். இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

நேரமின்மை, வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பலருக்கு வீட்டில் பூஜை செய்ய முடியாமல் போகும். அவர்கள் கவலைப்பட தேவையில்லை. அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று பூஜைகளில் கலந்துகொண்டு, மனமுருகி பிரார்த்தனை செய்து தெய்வத்தின் அருளை பெறலாம்.

அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும். பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com