பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க டிரோன்கள்.. ராம நவமி கொண்டாட்டத்திற்கு தயாராகும் அயோத்தி

ராம நவமியை கொண்டாட வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க டிரோன்கள்.. ராம நவமி கொண்டாட்டத்திற்கு தயாராகும் அயோத்தி
Published on

ராம பிரான் அவதரித்த தினமான ஸ்ரீராம நவமி விழா இந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி (நாளை மறுநாள்) கெண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் ஆலயங்களில் சிறப்பு உற்சவங்கள், சிறப்பு வழிபாடுகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமர் அவதரித்த இடமான அயேத்தியில் மிக பிரமாண்டமான முறையில் ராம நவமி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் சுமார் 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. ராம நவமியையொட்டி ராமர் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யய்பட்டுள்ளது.

ராம நவமி நாளில் அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பக்தர்கள் மீது சரயு நதி நீரை தெளிப்பதற்காக டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபற்றி அயோத்தி மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

ராம நவமி அன்று வரும் பக்தர்கள் மீது சரயு நதியின் புனித நீர் தெளிக்கப்படும். இதற்கு டிரோன்கள் பயன்படுத்தப்படும். அன்னை சரயு மீது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமமாக இருக்கும்.

ராம நவமி நாளில் அயோத்தியில் 2 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்படும். இந்த தீப உற்சவம் ஆன்மிகத்தின் அடையாளமாக மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவமாகவும் இருக்கும். இது தவிர, அஷ்டமி நாளில் கனக் பவனில் இருந்து பாரம்பரிய யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்படும். இது ராம் கதா பூங்காவில் நிறைவடையும்.

ராம் கதா பூங்காவில் நடனம், இசை மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராம நவமியை கொண்டாட வரும் பக்தர்களுக்கு எந்த வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் எங்களின் பணிகள் இருக்கும்.  பல்வேறு இடங்களில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவ முகாம்கள் மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க குளிர்ந்த குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ராமர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு தரிசன நேரத்தை நீட்டிக்கவும் ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. கோவில் வளாகத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com