14 ஆண்டுகளுக்கு பிறகு பகவதி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

தெப்பத் தேரில் எழுந்தருளிய பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு பகவதி அம்மன் கோவில் தெப்ப திருவிழா
Published on

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடந்தது.10-ம் நாள் நேற்று காலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

இரவு தெப்பத்திருவிழா நடந்தது. கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் பக்தர்களின் கடும் முயற்சியினால் தண்ணீர் நிரப்பி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடத்தப்பட்டது.

இதையொட்டி இரவு 10.45 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பகவதி அம்மனை எழுந்தருளச் செய்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெப்பக்குளத்துக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் தெப்பக்குளத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அம்மனை எழுந்தருள செய்து விசேஷ பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தெப்பத்தேர் புறப்பட்டு குளத்தில் மூன்று முறை வலம் வந்தது. தெப்பக்குளத்தை சுற்றி அமைந்துள்ள படிக்கட்டுகளில் பரத நாட்டியம், பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம், செண்டை மேளம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தெப்பக்குளத்தை சுற்றி திரண்டிருந்த பக்தர்கள் தீபங்கள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தெப்பக்குளத்தை சுற்றிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தெப்பதிருவிழா முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. அதன் பிறகு கிழக்கு வாசலில் அமைந்து உள்ள ஆராட்டு மண்டபத்தில் அம்மனை எழுந்தருளச் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் நள்ளிரவில் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com