சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

திருச்சி,

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். மாயா சூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், பக்தர்களை நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டியும் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை இக்கோவிலில் அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.

இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல் (கொடியேற்றுதல் முதல் திருநாள் வரை), காத்தல் (ரிஷப வாகன காட்சி, ஐந்தாம் திருநாள்), அழித்தல் (திருத்தேர், பத்தாம் திருநாள்), மறைத்தல் (முத்து பல்லக்கு உற்சவம், 12-ம் திருநாள்), அருள்பாலித்தல் (தெப்பம், 13-ம் திருநாள்) ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 17-ந்தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 18-ந்தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 19-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான 23-ந்தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com