மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு

குருவின் நேரடி பார்வை பெற்றுள்ள துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நற்பலன்களை வழங்க உள்ளார்.
மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. வளமான வாழ்வை அருளும் குரு பகவான், இந்த ஆண்டு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி மிதுன ராசிக்கு சென்றுள்ளார். குரு பார்க்க கோடி நன்மை" என்பதற்கு ஏற்ப, இந்த ஆண்டு பெயர்ச்சியின்போது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பதிந்திருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்களை குரு பகவான் வழங்க உள்ளார்.

எனவே, மேற்குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களும், வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலமறிந்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபடுவார்கள்.

குருப் பெயர்ச்சியான இன்று பிரபல குரு ஸ்தலங்களான ஆலங்குடி, திட்டை உள்பட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆலயங்களில் காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதையொட்டி அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உடுமலை

உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிந்து நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் சிறப்பு ஹோமம், அர்ச்சனை, திரவியாகுதி,பூர்ணாகுதி, தீபாராதனையும் அதைத் தொடர்ந்து குரு பகவான் உட்பட நவகிரகங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள், தேன், நெய், திருமஞ்சனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் இதையடுத்து அலங்காரம்,அர்ச்சனை, தீபாராதனையும் நடைபெற்றது.

அப்போது மேஷம்,மிதுனம், கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் உள்ளிட்ட பரிகார ராசிகளைச் கொண்ட பொதுமக்கள் கொண்டைக்கடலை, நெய், முல்லைப்பூ, மஞ்சள் துணி, நல்லெண்ணெய், தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு, பழங்கள் உள்ளிட்ட பரிகார பொருட்களை படைத்து குரு பகவானை வழிபட்டனர். குரு பகவானால் பலன் பெறும் ராசிகளான ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசியை கொண்ட பொதுமக்கள் தங்களால் இயன்ற பூஜை பொருட்களை கொடுத்து வழிபாடு செய்தனர்.

இதே போன்று உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதியில் நவகிரகங்கள் வீற்றிருக்கக்கூடிய கோவில்களில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவான் உள்ளிட்ட நவகிரகங்களை வழிபாடு செய்தனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 14.5.2025 அன்று குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com