அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்: உற்சாகமாக வரவேற்ற மக்கள்

அழகர்கோவிலுக்கு பகவான் வந்தடைந்தபோது பொதுமக்கள் வண்ண மலர்களை தூவி வரவேற்றனர்.
அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்: உற்சாகமாக வரவேற்ற மக்கள்
Published on

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10-ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். 11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்ற நிலையில், மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருளல், இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார். அப்போது வண்ண மலர்களை தூவி பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றியும், 21 திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் பகவானுக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு, வாசல் வரை வந்து நின்று கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com