கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம்- 12 கோவில்களில் தரிசனம் செய்த பக்தர்கள்

பாதி கோவில்களில் நேற்று தரிசனத்தை முடித்த பக்தர்கள் இன்று மீதம் இருக்கிற கோவில்களுக்கு செல்கிறார்கள்.
கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம்- 12 கோவில்களில் தரிசனம் செய்த பக்தர்கள்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவடைகிறது. 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் விரதம் இருந்து 12 சிவாலயங்களுக்கு ஓட்டமும், நடையுமாக சென்று சிவனை வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு சிவாலய ஓட்டம் நேற்று நடைபெற்றது. சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பதற்காக விரதம் இருந்த பக்தர்கள் நேற்று முஞ்சிறை மகாதேவர் கோவிலுக்கு வந்து சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். பிற்பகல் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பக்தர்கள் விசிறியும், கோவில்களில் கொடுக்கும் விபூதியை வைப்பதற்கு பொட்டலமும் வைத்துக்கொண்டு முஞ்சிறையில் இருந்து காப்பிக்காடு, சென்னித்தோட்டம், பல்லன்விளை, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அங்கிருந்து அருமனை, களியல் வழியாக திற்பரப்பு வீரபத்திரர் கோவிலுக்கும், அங்கிருந்து திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலுக்கும், திருநந்திக்கரையில் இருந்து குலசேகரம் வழியாக பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலுக்கும், பன்னிப்பாகம் கிராத மூர்த்தி கோவிலுக்கும் சென்று தரிசித்தனர்.

அதன்பிறகு கல்குளம் நீலகண்டேஷ்வரர் கோவில், மேலாங்கோடு காலகாலர் ஆலயம், திருவிடைக்கோடு சடையப்பர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம், திருப்பன்றிகோடு பருதிபாணி மகாதேவர் ஆலயம் வழியாக நட்டாலம் சங்கர நாராயணர் ஆலயம் சென்று சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்தனர்.

பாதி கோவில்களில் நேற்று தரிசனத்தை முடித்த பக்தர்கள் இன்று (புதன்கிழமை) மீதம் இருக்கிற கோவில்களுக்கு செல்கிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com