சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது.
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
Published on

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை நடந்து வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டியபடி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

நடப்பாண்டின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இதனையொட்டி நடத்தப்படும் சுத்திகிரியை பூஜைகள் கடந்த 2 நாட்கள் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி முன்னிலையில் நடந்தது.

இன்று காலை 8.45 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். பந்தளத்தில் இருந்து திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டது. இந்த திருவாபரணம் சன்னிதானத்தை இன்று வந்தடைந்ததும் மாலை 6.30 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துவார்கள். அப்போது பொன்னம்பல மேட்டில் அய்யப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்களால் விண்ணதிர அய்யப்ப சரணகோஷம் எதிரொலிக்கும். இதனை தொடர்ந்து புஷ்பாபிஷேக வழிபாடு நடைபெறும்.

மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் நாலா திசைகளிலும் கூடாரங்கள் அமைத்து ஆங்காங்கே குவிந்துள்ளனர். குறிப்பாக பெரியானை வட்டம் பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் ஏராளமான பக்தர்கள் முகாமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com