திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பார்ச்சனை

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பார்ச்சனை
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 22-ம் தேதி  தொடங்கியது. விழா நாட்களில் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கசவம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பார்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

முருகன் கோவில்களில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பார்ச்சனை நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம். அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பார்ச்சனை நடத்தப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com