தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தாகள் தாசனம்

தென்காசி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

தென் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் புனரமைப்பு என திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இன்று அதிகாலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூத்திகளுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கடிமணி மற்றும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள், 37 இன்ஸ்பெக்டர்கள், 138 சப்-இன்ஸ்பெக்டர்கள், 155 ஆயுதப்படை வீரர்கள், 140 பட்டாலியன் போலீசார், 72 ஊர்க்காவல்படை வீரர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி நகரப்பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்படாமல் புறநகர் பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

தென்காசி நகரப்பகுதியை சுற்றி தற்காலிகமாக 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com