திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்
Published on

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாக திருநாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். வைகாசி விசாக திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com