ஆசிய கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான்

ஷாகீன் அப்ரிடி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் (யுஏஇ) மோதியது. இதில் டாஸ் ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சைம் அயூப் தொடர்ந்து 3-வது முறையாக டக்-அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பர்ஹான் 5 ரன்னில் அடங்கினார். இதன் பின்னர் பஹர் ஜமான் (50 ரன்), கேப்டன் சல்மான் ஆஹா (20 ரன்) சரிவை சமாளித்தாலும் பின்வரிசை வீரர்கள் திணறினர். கடைசி கட்டத்தில் ஷகீன் ஷா அப்ரிடி 29 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து சவாலான ஸ்கோருக்கு உதவினார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 2 விக்கெட் கைப்பற்றியதுடன் இறுதி கட்டத்தில் பேட்டிங்கிலும் அசத்திய ஷாகீன் அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டியில் விளையாடி 2 வெற்றி கண்ட பாகிஸ்தான் ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே இந்த பிரிவிலிருந்து முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுவிட்டது. யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் முறையே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெறியேறியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com