இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லீட்ஸ்,

4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி லீட்சில் இன்று (இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு) நடக்கிறது. அடுத்த மாதம் 1-ந்தேதி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் அதற்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் பொறுப்பேற்ற பிறகு அந்த அணி விளையாடும் முதல் தொடர் என்பதால் அந்த வகையிலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான், ஷகீன் ஷா அப்ரிடி, ஷதப் கான், ஹாரிஸ் ரவுப், முகமது அமிர் என்று முன்னணி வீரர்கள் அனைவரும் திரும்பியிருப்பதால் வலுவாக மாறியுள்ளது.

இதே போல் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ, பில் சால்ட், ஹாரி புரூக், ஜோப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், மார்க்வுட், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால் அந்த அணியும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் இங்கிலாந்தும், 9-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com