என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? - விராட் கோலி

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஜான்சன் வீசிய பவுன்சரால் தம்முடைய ஒரு கண் பார்வை மங்கும் அளவுக்கு கலங்கிப்போனதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஏராளமான சாதனைகள் படைத்து வருகிறார். மேலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமான சராசரியில் எதிரணிகளை பந்தாடி வரும் அவர் இதுவரை 26,000+ ரன்கள், 80 சதங்கள் அடித்து சாதனை நாயகனாக ஜொலித்து வருகிறார்.

களத்தில் இவரது ஆக்ரோஷமான செயல்பாட்டிற்காகவே உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். களத்தில் எதிரணிகள் அவரையோ மற்ற இந்திய வீரர்களையோ சீண்டினால் அதற்கெல்லாம் அசராமல் தக்க பதிலடி கொடுப்பார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு அவர் கொடுத்த பதிலடியை சொல்லலாம்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் கோலி சந்தித்த முதல் பந்தையே மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசினார். இளம் வீரராக இருந்த விராட் கோலி அதை சரியாக கணிக்கத் தவறி தலையில் அடி வாங்கி கீழே விழுந்தார்.

இருப்பினும் அதற்காக அசராமல் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலி கடைசியில் சதமடித்து முத்தத்தை காற்றில் பறக்க விட்டு ஜான்சனுக்கு மாஸ் பதிலடி கொடுத்ததார். அந்த தொடர் முழுவதுமே இருவருக்கும் இடையே நீயா? நானா? போட்டி நிலவியது.

இந்நிலையில் அப்போட்டியில் ஜான்சன் வீசிய பவுன்சரால் தம்முடைய ஒரு கண் பார்வை மங்கும் அளவுக்கு கலங்கிப்போனதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இவர் என்னை அடிப்பார் என்ற வெறியுடன் மீண்டும் பேட்டிங் செய்து ஜான்சனுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.:-

"அந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஜான்சன் என்னுடைய தலையில் அடித்தார். அதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. அந்த தொடரில் இப்படி விளையாடுவோம் அப்படி பேட்டிங் செய்வோம் என்று 2 மாதங்களாக நான் கனவு கண்டு வைத்திருந்தேன். ஆனால் முதல் பந்திலேயே தலையில் அடி வாங்கியதால் என்னுடைய மொத்த திட்டத்தையும் மாற்றினேன். அந்த அடியால் எனது இடது கண் வீங்க தொடங்கியதால் பார்வை குறைய துவங்கியது.

அதை நான் அப்போது கவனிக்கவில்லை. இருப்பினும் உணவு இடைவெளிக்கு முன் அவ்வாறு நடந்ததற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அதன் காரணமாக சண்டையிட வேண்டும் அல்லது விமானத்தில் வீடு திரும்ப வேண்டும் என்ற 2 விருப்பங்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. அப்போது "என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இவரை நான் அடித்து நொறுக்குவேன்" என்பதே என்னுடைய ரியாக்சனாக இருந்தது. கடைசியில் அதையே செய்தேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com