மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2022 10:15 PM GMT (Updated: 4 Jan 2022 10:15 PM GMT)

மழையால் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெருமழை பெய்ததன் காரணமாக தமிழ்நாட்டில், பெரும்பாலான பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் மழைநீர் புகுந்து மக்களின் உடைமைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புக்கு இதுவரை எந்தவித நிதியுதவியும் அளிக்காத நிலையில், 30-12-2021 அன்று சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரலாறு காணாத மிகப்பெரிய கனமழை பெய்து மக்களுக்கு ஆற்றொணா துயரத்தை அளித்து, கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. 2 பாதிப்புகளுக்கும் நிதியுதவி அளிக்கவேண்டிய கடமை தி.மு.க. அரசுக்கு உள்ளது. அந்த கடமையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

2015-ம் ஆண்டு இதேபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எந்தெந்த தெருக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்ததோ, அந்த தெருக்களில் வசிக்கும் எல்லோருக்கும், எந்த வித்தியாசமும் இன்றி தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

ரூ.10 ஆயிரம்

2015-ம் ஆண்டே ரூ.5 ஆயிரம் நிவாரணமாக அளிக்கப்பட்டு இருப்பதையும், தற்போது விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருப்பதையும் கருத்தில்கொண்டு பார்த்தால், ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்க வேண்டும். இருப்பினும் குறைந்தபட்சம் 2015-ம் ஆண்டு அளித்த ரூ.5 ஆயிரம் நிவாரணத்தையாவது அளிக்க வேண்டும் என்பதும், 2 முறை பாதிக்கப்பட்டதால் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களின் பாதிப்பை ஓரளவு குறைக்கும் வகையிலும், ஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவியும், 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்க முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெல் மூட்டைகளை பாதுகாப்பாக...

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அருகே சன்னாபுரத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது.

எனவே முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தி, திறந்தவெளி களங்களில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய-மாநில அரசுகளுக்கு சொந்தமான கிடங்குகளிலோ அல்லது அரசு கட்டிடங்களிலோ பாதுகாப்பாக வைக்கவும், கிடங்குகள் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story