

ரஞ்சித் சங்கர் இயக்கியிருக்கும் ஞான் மேரிக்குட்டி படத்தில், ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார். இதற்காக அவர் சேலை கட்டி பழகிக் கொண்டார். ஜெயசூர்யாவுக்கு அவரது மனைவி சரிதா சேலை கட்டுவதற்கு சொல்லிக் கொடுத்திருந்தார். ஞான் மேரிக்குட்டி படப்பிடிப்பு முடிவதற்குள், அவரது மனைவியை விடவும் விரைவாக, 4 நிமிடங்களில் சேலை கட்ட பழகிக் கொண்டார் ஜெயசூர்யா.
மலையாள உலகில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த ஞான் மேரிக்குட்டி படம், அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. திருநங்கைகளை பெருமைப்படுத்தும் விதமாக இந்தப் படம் இருப்பதாக பல தரப்பில் இருந்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சுமார் 50 திருநங்கைகளுடன் சேர்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பத்மா தியேட்டரில் ஜெயசூர்யா பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் பெரும்பாலும் ஜெயசூர்யா சிவப்பு நிற சேலையையே கட்டி நடித்திருப்பதால், படம் பார்க்க வந்த திருநங்கைகள் அனைவரும் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தனர்.
படம் முடிந்து வெளியில் வந்த திருநங்கைகள் பலரும், திருநங்கைகளைப் பற்றி இந்த சமூகத்தில் இருக்கும் சில தவறான எண்ணங்களை, இந்தப் படம் மாற்றும். எங்களைப் போன்றவர்களை இந்தப் படம் பெருமைப்படுத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.