ஹைவேவிஸ் மலைப்பாதையில் விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுகின்றன - நேரில் ஆய்வு செய்த கலெக்டர் தகவல்

ஹைவேவிஸ் மலைப்பாதையில் சாலை விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்பட்டுகின்றன என நேரில் ஆய்வு செய்த பிறகு கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
ஹைவேவிஸ் மலைப்பாதையில் விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுகின்றன - நேரில் ஆய்வு செய்த கலெக்டர் தகவல்
Published on

சின்னமனூர்,

சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் செல்லும் மாலைப்பாதையில் தென்பழனி அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

சமீப காலங்களாக இந்த மலைப்பாதையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் விபத்து தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மந்திப்பாறை என்ற இடத்தில் தொடர் விபத்துகள் நடந்துள்ளதால் இந்த இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

விபத்துகள் ஏற்பட்டதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த பகுதிகளில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மலைப்பாதையில் எப்போதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கு பிறகு கலெக்டர் கூறியதாவது:-

மேகமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் திரும்பி செல்லும் போது விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக சீட் பெல்ட் அணியாமல் செல்வதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனம் பிடிக்க வேண்டும் என்பதற்காக இறக்கமான மலைப்பாதை வாகன ஓட்டிகள் பலரும் என்ஜின் இயக்கத்தை நிறுத்தி வைத்து கியர் போடாமல் ஓட்டி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் இறக்கமான வளைவு பகுதியில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாகனத்தை எப்போதும் போல் இயக்கியபடியே மலையிறங்கி வர வேண்டும். டீசல் மிச்சம் பிடிப்பதாக நினைத்து விபரீதமாக வாகனம் ஓட்டக்கூடாது.

கடந்த முறை நடந்துள்ள விபத்துகள் சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதுபோல், சாலையில் தேவையான இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். சாலையோர வளைவு பகுதிகளில் அலுமினியத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகேசன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள், போக்குவரத்து கழக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com