திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம்; வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம்; வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள்
Published on

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலைஅம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை சுமார் 5 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால சாமிக்கும், கஜலட்சுமி அம்மனுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சாமி சன்னதியில் இருந்து வைகுண்ட வாசல் வழியாக வெளியே வந்தனர்.

திரளான பக்தர்கள்

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெரும்பாலான பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்து கிரிவலம் சென்றனர்.

இதேபோல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர பெருமாள், சின்னக்கடை தெருவில் உள்ள பூத நாராயணர், அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

ஆரணி சார்ப்னார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை சாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு உற்சவர் சுவாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜகோபுரத்தின் முன்பு சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து திருப்பாவை உற்சவமும் நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சாமியை பெரியகடைவீதி, மண்டி வீதி, மார்க்கெட் ரோடு, வடக்கு மாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத சீனிவாச் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் விழா நடந்தது, ஆரணி தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ராஜகோபுரத்தின் வழியாக சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. சாமி சொர்க்கவாசல் வழியாக வெளியே பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார், ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

செங்கம்

செங்கத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார். மூலவருக்கு அபிஷேகங்களும், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில்,உள்ள பாண்டுரங்கன்-ருக்மாயி கோவிலில் பரமபதவாசல் வழியாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பாண்டுரங்கன்-ருக்மாயி சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், கோவில் மண்டபம் அருகில் எழுந்தருளினார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் பெருமாள் கோவிலில் அதிகாலை 6 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது ஸ்ரீகிருஷ்ணா கருடவாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஒண்ணுபுரம் கிராமத்தில் வரதராஜபெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாளை சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. மேலும் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com