ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நயினார் நாகேந்திரனும், தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியும், அ.ம.மு.க. சார்பில் வது.ந.ஆனந்த்தும், நாம்தமிழர் கட்சி சார்பில் புவனேஸ்வரி, மக்கள் நீதிமய்யம் சார்பில் விஜயபாஸ்கர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பஞ்சாட்சரம், பூர்வாஞ்சல் ஜனதா கட்சி சார்பில் கேசவ்யாதவ், லோகியா கட்சியின் சார்பில் லோகநாதன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் புல்லங்குடி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வாக்கு எண்ணிக்கை நேற்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கின.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மாவட்ட கலெக்டரும், தொகுதி தேர்தல் அலுவலருமான வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தார். இதையடுத்து வெற்றிமுகத்தில் பயணித்தார்.
19-வது சுற்றில் பா.ஜனதா வேட்பாளரை விட 1 லட்சம் ஓட்டுகள்பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இதில் அ.ம.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றதால் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜனதா வெற்றி வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டது.
19-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3,77,955
பா.ஜனதா-2,73,190
அ.ம.மு.க.-1,15,999
நாம் தமிழர் கட்சி-38,142
மக்கள் நீதி மய்யம்-12,020
நோட்டா-6,256