தோனி, விராட், ரோகித் இல்லை... பிடித்த கேப்டன் யார்? - பும்ரா பதில்

தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தமக்கு இந்திய அணியில் பாதுகாப்பான இடத்தையும் நம்பிக்கையும் கொடுத்ததாகவும் பும்ரா தெரிவித்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு மிக அருகே சென்றபோது, அவர் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியின் போக்கை மாற்றி அமைத்தது.

கடந்த 2016-ல் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசினார். அதன் காரணமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்திய அவரால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டன.

ஆனால் 2018-ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக அவதரித்தார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் பும்ரா நம்பர் 1 பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினர்.

இந்நிலையில் தமக்கு பிடித்த கேப்டன் தாம் தான் என்று ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தமக்கு இந்திய அணியில் பாதுகாப்பான இடத்தையும் நம்பிக்கையும் கொடுத்ததாகவும் பும்ரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"நான் தான் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன். சில போட்டிகளில் நானும் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதே சமயம் இங்கே மகத்தான கேப்டன்களும் உள்ளனர். இருப்பினும் நான் என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வேன். இந்தியாவுக்காக அறிமுகமான போது எம்எஸ் தோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார். எனர்ஜியால் செயல்படக்கூடிய விராட் கோலி ஆர்வத்துடன் பிட்னஸை பின்பற்றுமாறு தள்ளினார். ரோகித் சர்மா வீரர்களின் உணர்வுகளை அறிந்து அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து உதவினார்.

அந்த வகையில் அனைவரும் இந்திய அணி முன்னோக்கி செல்வதற்கு உதவினர். குறிப்பாக ரோகித் சர்மா இளம் வீரர்களிடம் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகுவார். குறிப்பாக அவர் இளம் வீரர்களை நாம் அணியில் இல்லை என்று நினைக்க விட்டதில்லை. எனவே ரோகித் சர்மா கேப்டனாக கிடைத்ததற்கும் அவருடைய தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கருதுவேன்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com