உத்தரப்பிரதேசம் தேர்தல்: புல்டோசர்களைக் கொண்டு வெற்றியை கொண்டாடும் பாஜகவினர்..!


உத்தரப்பிரதேசம் தேர்தல்: புல்டோசர்களைக் கொண்டு வெற்றியை கொண்டாடும் பாஜகவினர்..!
x
தினத்தந்தி 10 March 2022 9:36 AM GMT (Updated: 10 March 2022 9:36 AM GMT)

உத்தரப்பிரதேசம் தேர்தலின் வெற்றியை புல்டோசர்களைக் கொண்டு பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

லக்னோ,

403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  இதில், பா.ஜ.க. 260-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், கிரிமினல்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை புல்டோசர்களை கொண்டு அதிகாரிகள் இடித்து தள்ளினர்.  சைக்கிளை தேர்தல் சின்னம் ஆக கொண்ட, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூட முன்பு, புல்டோசர் பாபா என யோகியை அழைத்திருந்தார்.  யோகி ஆதித்யநாத் கூட, தேர்தல் கூட்டமொன்றில் பேசும்போது விரைவுசாலை அமைக்க பயன்படும் புல்டோசர், மாபியாக்களை (குற்றவாளிகள் கொண்ட கும்பலை) அழிக்கவும் சிறந்த ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது யோகி ஆதித்யநாத்தின் கூட்டத்தில் பாஜகவினர் 'புல்டோசர் பாபா வாழ்க' என்று கோஷம் எழுப்பினர். உத்தர பிரதேசம் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், லக்னோவில் பாஜகவினர் புல்டோசர்களில் ஏறி நின்று வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, புல்டோசருக்கு முன் எதுவும் வரமுடியாது. அது சைக்கிள் ஆகட்டும்.  அல்லது வேறு எதுவாகவும் இருக்கட்டும்.  ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்து விடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story