நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து


நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து
x

வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம் தலைசிறந்த மருத்துவர்கள் உருவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு, இன்று (ஞாயிற்றுகிழமை) நடக்கிறது. இந்த தேர்வை, தமிழகத்தில் 1½ லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடுமுழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வானது, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி அவர்கள், வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார். வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.


Next Story