காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; பட்டம் பெற வந்த 300 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பிதழ் இல்லாமல் வந்த 300 மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பிதழ் இல்லாமல் வந்த 300 மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் படித்த 2 ஆயிரத்து 314 பேருக்கு பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டம் பெற தகுதியுடைய 2 ஆயிரத்து 314 பேருக்கும் அழைப்பிதழ் வழங்க பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அனுமதி மறுப்பு
ஆனால் பட்டம் பெறும் ஏராளமான மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக மாணவர்களுக்கு பட்டம் பெறுவது குறித்து தகவல் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணிற்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த அழைப்பிதழை காந்திகிராம பல்கலைக்கழக நுழைவு வாயிலில் காண்பித்து பட்டம் பெற வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று மாணவர்கள் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட அழைப்பிதழை காட்டி பல்கலைக்கழகத்துக்குள் சென்றனர். இதற்கிடையே சுமார் 300 மாணவ-மாணவிகள் அழைப்பிதழ் இல்லாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நுழைவு வாயில் பகுதியில் நின்றிருந்த போலீசார், அழைப்பிதழ் இல்லாமல் வந்த மாணவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஏமாற்றம்
இதுகுறித்து அனுமதி மறுக்கப்பட்ட மாணவிகள் சிலர் கூறுகையில், நாங்கள் 2019-ம் ஆண்டு இந்த பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தோம். இன்று (நேற்று) பட்டம் வழங்குவதையொட்டி, அதற்காக கட்டணம் செலுத்தி பதிவு செய்தோம். எங்களுடன் படித்த மற்ற மாணவர்களுக்கு அழைப்பிதழ் கடிதம், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
ஆனால் எங்களை போன்ற ஏராளமான மாணவர்களுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டமளிப்பு விழா அன்று நேரில் வாருங்கள், பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினர். அதனை நம்பி நாங்கள் வந்தோம். ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர். எங்களில் பலர் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
அதிகாலையிலேயே காந்திகிராமத்துக்கு வந்துவிட்ேடாம். ஆனால் அழைப்பிதழ் இல்லாததால் எங்களை வெளியேற்றியது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றனர்.