காசை மிச்சப்படுத்தும் ஆயத்த சுற்றுச் சுவர்கள்


காசை மிச்சப்படுத்தும் ஆயத்த சுற்றுச் சுவர்கள்
x

ஒவ்வொரு வீட்டிற்கும் சுற்றுச்சுவர் என்பது மிகவும் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது. வீட்டைக் கட்டி முடித்த பிறகு சுற்றுச்சுவரை கடைசியாக எழுப்புவார்கள். சில நேரங்களில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு நேரமில்லாமல் கிரகப்பிரவேசம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு.இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை புதுமையான ஆயத்த சுற்றுச் சுவர்கள். அனைத்திலும் ரெடிமேடை விரும்பும் நாம் ரெடிமேட் சுற்றுச் சுவர்களை விரும்பாமல் இருப்போமா என்ன?

பிரீ காஸ்ட் சுற்றுச்சுவர், பிரீ காஸ்ட் பண்ணை வீட்டிற்கான சுற்றுச்சுவர், கொடௌன் சுற்றுச்சுவர், வணிகப் பகுதிக்கான ஆயத்த சுற்றுச்சுவர் மற்றும் தோட்டத்திற்கான சுற்றுச் சுவர்கள் என ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார்போல் பலவித டிசைன்கள் மற்றும் மாடல்களில் இவை கிடைக்கின்றன..

50 மில்லி மீட்டர் தடிமனில் ஆர் சி சி,கான்கிரீட் போன்ற பொருள்களால் ஆறு அடி உயரம் முதல் ஆயத்த சுற்றுச்சுவர்கள் கிடைக்கின்றன..ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் செங்குத்து ஆர் சி சி அல்லது கான்கிரீட் பலகைகளில் கிடைமட்டமாக கான்கிரீட் பலகைகளை இணைத்து அமைக்கப்படும் சுற்றுச்சுவர்கள் இடைவெளிகளுடன் இருப்பது போலவும் இடைவெளி இல்லாமல் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சில டிசைன்களில் செங்குத்து தூண்களுக்கு இடையே செங்கற்களை கொண்டு கட்டி இருப்பதுபோலவே டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது அழகாக இருக்கின்றது.. பிளெயின் கிடைமட்ட ஆர்சிசி பலகைகளின் மேல் வரிசை மட்டும் அலைகள் போன்று வளைவுகளுடன் இருப்பது கவர்ச்சிகரமாக உள்ளது.

தொழிற்சாலைப் பகுதிகளில் அமைக்கப்படும் இதுபோன்ற ஆயத்த சுற்றுச்சுவர்கள் இரும்புத் தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் யாரும் நுழையாதவாறு இரும்பு முள் கம்பிகளை சுற்றி அமைக்கப்படுவது பாதுகாப்பை தருவதாக உள்ளது.

விவசாயம் நடைபெறும் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாதவாறு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற ஆயத்த சுற்றுச் சுவர்களை அமைக்கிறார்கள்.. சாம்பல் வண்ணத்தில் இருக்கும் இந்த சுவர்களுக்கு நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் வண்ணங்களை தேர்ந்தெடுத்து பூசிக்கொள்ளமுடியும்.

இதுபோன்ற ஆயத்த சுற்றுச் சுவர்களை அமைப்பதன் மூலம் நமக்கு நேரம் மட்டுமல்லாது பணத்தையும் சேமிக்க முடிகின்றது. கற்களை வைத்து கட்டப்படும் சுற்றுச் சுவர்களைப் போலவே உறுதியாகவும் அதே நேரத்தில் மிகக் குறைந்த காலத்தில் கட்டக் கூடியதாகவும் இருக்கக்கூடிய இந்த ஆயத்த சுற்றுச் சுவர்களை தயாரிக்கும் இடங்களிலிருந்து வாங்கிவந்து எளிதில் பொருத்திவிட முடியும்..

ஆயத்த சுற்றுச்சுவர் பாதுகாப்பானதா? என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலே பொருத்தமானது. இந்த சுவர்கள் நெருப்பு மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கின்றன.. நெருப்பு மற்றும் ஈரப்பதமானது இந்தச் சுவர்களை தாக்கும் பொழுது அவை எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. இந்தச் சுவர்கள் கட்டும்பொழுது கட்டுமானத்தின் போது ஏதேனும் தோல்வி ஏற்பட்டால், அதில் பயன்படுத்தப்படும் சில நெடு வரிசை பேனல்களை மட்டும் மாற்றினால் போதுமானதாக இருக்கும். அதேபோல் சிறிய பழுது பார்ப்பதன் மூலம் பழுது ஏற்பட்ட பேனல்களை மீண்டும் பயன்படுத்தலாம். இதுபோன்ற பிரீ காஸ்ட் சுற்றுச் சுவர்கள் உயர் பாதுகாப்பை வழங்குகின்றன.இவ்வகை சுற்றுச் சுவர்களை கட்டுமான தளத்தில் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு, சத்தம் மற்றும் குப்பைகள் குறைகின்றன.


Next Story