சம்பள பாக்கியால் படம் முடக்கம் டைரக்டர்கள் கவுதம் மேனன்- கார்த்திக் நரேன் மோதல்

சம்பள பாக்கியால் டைரக்டர்கள் கவுதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பள பாக்கியால் படம் முடக்கம் டைரக்டர்கள் கவுதம் மேனன்- கார்த்திக் நரேன் மோதல்
Published on

சம்பள பாக்கியால் டைரக்டர்கள் கவுதம் மேனன்-கார்த்திக் நரேன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கார்த்திக் நரேன் துருவங்கள் 16 படத்தை இயக்கி பிரபலமானவர். சிறு பட்ஜெட்டில் தயாரான அந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தற்போது அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிக்க நரகாசுரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில், சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களை கொன்று விடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் ஒரு தடவைக்கு இரண்டு முறை சிந்தித்து நம்பிக்கை வையுங்கள். மீறி தவறான நம்பிக்கை வைத்தால் உங்களுடையை கனவு எல்லா திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கார்த்திக் நரேன் யாரை சாடியுள்ளார் என்பது தெளிவாகாமல் இருந்தது. பெயரை சொல்லுங்கள் என்று கேட்டு பலர் டுவிட்டரில் கேள்வி விடுத்தனர். தற்போது டுவிட்டரில் இன்னொரு கருத்தை பதிவிட்டு தனக்கும், கவுதம் மேனனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கார்த்திக் நரேன் உறுதிப்படுத்தி உள்ளார்.

பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். இறுதியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகி விட்டது. தயவு செய்து இனிமேல் யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள் என்று டுவிட்டரில் கவுதம் மேனன் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

நரகாசுரன் படத்தில் நடித்தவர்களுக்கு கவுதம் மேனன் சம்பள பாக்கி வைத்ததாகவும் இதனால் பலர் டப்பிங் பேச மறுத்து பட வேலைகள் முடங்கியதாகவும் கூறப்படுகிறது. கார்த்திக் நரேனுக்கு பதில் அளிக்கும் விதமாக, என் சூழ்நிலை உங்களை போன்ற இளைஞர்களுக்கு புரியவில்லை என்று கவுதம் மேனன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com