

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி கதாநாயகனாக நடித்துள்ள படம் அல்டி. சென்ட்ராயன், யாஷி, ராபர்ட், மனிஷா ஜித், மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். உசேன் இயக்கி உள்ளார். ஷேக்முகமது, ரஹ்மத்துல்லா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ் சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். தியேட்டருக்கு படத்தை பார்க்க கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுத்து விட்டனர். அதனை நினைத்து பார்த்திபன் வேதனை அடைந்தார்.
பார்க்க பார்க்கத்தான் மக்களுக்கு படம் பிடிக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் படத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் திரையிட நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன். சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த படங்களை குறைந்தது 5 நாட்களாவது திரையிட வேண்டும். மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி நடித்துள்ள அல்டி படம் வெற்றி பெறும். இவ்வாறு ராதாரவி பேசினார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, பெரிய ஜாம்பவான்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள். மயில்சாமியிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவரது அப்பாவித்தனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
டைரக்டர் பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரும் பேசினார்கள்.