

படத்துக்கு, தீ இவன் என்று பெயர் சூட்டியிருக்கிறார். அது என்ன தீ இவன் என்ற பெயர்? என கேட்டபோது- டைரக்டர் டி.எம்.ஜெயமுருகன் விளக்கமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
படத்தின் டைட்டில், கதாநாயகனின் கதாபாத்திரத்தை குறிக்கும். கதாநாயகனின் சுபாவத்தை குறிக்கும். விவசாயத்தை வாழ்க்கையாகவும், தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான், படத்தின் மையக்கரு.
அண்ணன்-தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாக-கதையின் நாயகனாக கார்த்திக் நடிக்கிறார். அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கையாக சேது அபிதா நடிக்கிறார். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே படங்களின் வரிசையில், இந்த படமும் இடம் பெறும்.
சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, பெரைரா, சரவண சக்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, அலிமிர்சாக் பின்னணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.