ஜாக்கிசான் எனும் கூலித் தொழிலாளி

நாம் உண்ணவே உணவு இல்லை நமக்கு ஒரு குழந்தை தேவையா என்று மனம் வருந்தி வாழ்ந்த கூலித்தொழிலாளியின் மகனாக பிறந்தவர் இன்று உலக சாதனையாளராக உள்ளார் என்றால் நம்புவீர்களா?.
ஜாக்கிசான் எனும் கூலித் தொழிலாளி
Published on

ஹாங்காங்கில் 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி ஓர் அழகான ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ்சான் ஒரு சமையல்காரர். தாய் லீலீ வீட்டு வேலை செய்யும் பெண்.

பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும், குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், அதற்கு ஏழை பெற்றோர் மறுத்துவிட்டனர். அந்தக் குழந்தைக்கு சான் காங்சாங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம். இந்தநிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. அங்குள்ள சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்சாங் சேர்ந்தார்.

தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்பூ என மார்ஷியல் கலைகள் அனைத்தையும் கற்றார். அவர் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தார். எட்டு வயதில் பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன் என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். அவருடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த என்டர் தி டிராகன் படத்தில் ஒரு சண்டைக் கலைஞர் வாய்ப்பு கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டண்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்சாங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தார்.

அதன் பின்பு வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டிட கூலி வேலை செய்தார். தினக்கூலியாக வேலை பார்த்தாலும், இவரது துருதுருப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்த சக தொழிலாளர் ஒருவர் லிட்டில் ஜாக் என்று அழைத்தார். இதுவே பின்னர் ஜாக்கி ஆனது. அப்போது ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வரவும், ஜாக்கிசான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், பிஸ்ட் ஆப் ப்யூரி என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.

இன்று காமெடி, சண்டை படங்களுக்கு நிகரில்லாத ஹீரோவாகவும், ஆசியாவின் மிகப்பெரும் ஸ்டாராகவும் ஜாக்கிசான் உள்ளார். அன்றைய கூலித் தொழிலாளியான ஜாக்கிசான், தனது வாழ்க்கை வரலாற்றை ஐ ஆம் ஜாக்கிசான் தி மியூசிக்கல் என்ற பெயரில் மியூசிக் ஆல்பமாக தயாரிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com