ஈழத்தில் எம் உறவுகள் பட்ட வலிகளை படைப்பாக்கிய பின்னரே என் தலை சாயும் - இயக்குனர் கவுதமன்

இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து, 'தீப்பந்தம்' என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஈழத்தில் எம் உறவுகள் பட்ட வலிகளை படைப்பாக்கிய பின்னரே என் தலை சாயும் - இயக்குனர் கவுதமன்
Published on

ராஜ் சிவராஜ் இயக்கத்தில் தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை, மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், கே.நஜாத், எல்.பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி, சபேசன், ஆர்.கே.கஜா உள்பட பலர் நடித்திருக்கும் 'தீப்பந்தம்' படம் இலங்கையில் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கதைப்படி, இலங்கையில் நுலகராக இருக்கும் ஒரு பெரியவர் ஒருவர் தமிழின் தென்மையை, படைப்புகளை, நுல்களை பாதுகாக்க நினைக்கிறார். அவருக்கு என்ன பிரச்னை வருகிறது. என்ன நடந்தது என்பது கதை. காதல், காமெடி, எமோஷனல், திருப்பங்கள் கலந்து பக்கா கமர்ஷியல் படமாக தீப்பந்தம் உருவாகி உள்ளது.

ஈழத்து கலைஞர்களின் தீப்பந்தம் திரைப்பட விழாவானது அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அங்கு விருந்தனராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"யுத்தம் நடைபெற்று 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இன்றைய இளைய தலைமுறைகள் இந்த யுத்தத்தை, இந்தப் பேரு இழப்பை மறந்து மயக்க நிலையில் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மட்டும் இதற்கு காரணம் அல்ல அங்கு ஆட்சி செய்கின்ற அதிகார வர்க்கமும் இதற்கு காரணம்.போதை, சினிமா என்பவற்றுக்குள் சிக்கியுள்ளது இளைஞர் சமுதாயம். இரத்த அபிஷேகம் நடைபெற்ற மண்ணில் அஜித் விஜய் உட்பட்ட திரையுலக பிரபலங்களின் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற நிலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் காணப்படுகிறது.இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் நோக்குடன் தான் அங்கு இருக்கின்ற எமது பிள்ளைகள் தீப்பந்தம் என்ற ஒரு அரிய படைப்பினை உருவாக்கியுள்ளார்கள். இனி வருகின்ற தலைமுறையாவது நாங்கள் எவற்றை எல்லாம் இழந்து இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த படைப்பு மூலம் வெளிக்கொணர தொடங்கி இருக்கின்றார்கள்.

எனது வாழ்க்கையில் சந்தனக்காடு படைப்பை உருவாக்கி விட்டேன். முந்திரி காடு படைப்பில் தமிழரசனின் வரலாறு உள்ளது. அடுத்ததாக எமது வன்னியில் எமது உறவுகள் பட்ட வலிகளை வெளிப்படுத்தும் வகையில் வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு. இந்த உலகம் தலைகுனிய தலைகுனிய, கதறியழ அழ, இந்திய தேசம் உட்பட எமது மக்களை அழிப்பதற்கு காரணமான அதிகார வர்க்கங்கள் கல்லறையில் இருந்தாலும் அவர்களை தோண்டி எடுத்து துப்புகின்ற படைப்புகளாக என் இனத்தின் படைப்புகளை படைத்த பின்னர் தான் என் தலை சாயும்.

சிங்களவர் குறைந்த மதிப்பெண்களை பெற்றால் அவர்கள் மருத்துவமோ, பொறியியலோ படிப்பதற்கு செல்லலாம். ஆனால் தமிழர்கள் எழுவது மதிப்பெண்கள் எடுத்தால் கூட அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடையாது. கல்வி உரிமை மறுக்கப்பட்டால் வேலை உரிமை மறுக்கப்படும். கல்வியும், வேலையும் மறுக்கப்பட்டால் வாழ்வியல் உரிமை என்பது கிடையாது. நிலமும் கிடையாது. இதனால்தான் தமிழினம் போராடியது. இதன் பிரதிபலிப்பாக தன் யாழ். நூலக எரிப்பு இடம்பெற்றது. அறிவை மறைப்பது என்பது, அறிவை மறுப்பது என்பது, அறிவை இல்லாமல் செய்வது என்பது ஒரு இனத்தை அழிப்பதற்கு சமமானது. ஈழத் தமிழ் உறவுகளின் விடிவுக்காக எமது குரல் தொடர்ந்து ஒலித்துக் கண்டே இருக்கும்" என்றார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com