"நாங்கள்" படத்தின் டிரெய்லர் வெளியானது


தினத்தந்தி 11 April 2025 6:14 PM IST (Updated: 11 April 2025 7:12 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை பெற்ற 'நாங்கள்' திரைப்படம் வருகிற 18ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் 'நாங்கள்'. திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார்.

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான 'நாங்கள்' ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்'மற்றும் 'அழகு குட்டி செல்லம்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த வேத் ஷங்கர் சுகவனம் 'நாங்கள்' படத்திற்கு இசையமைத்துள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து பேசிய இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், "பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள். ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களும் வரவேற்பார்கள் என நம்புகிறேன். முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்துள்ளது," என்றார்.

இந்நிலையில் 'நாங்கள்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற 18ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story