

சென்னை,
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் பேசும் போது, எனது தந்தை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மூன்றாவது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஆறாவது தளத்தில் உள்ள தனிப்பட்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றபட்டு உள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மருத்துவர்களிடம் பெருவிரலை உயர்த்தி காட்டுகிறார். அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது.
தொடர்ந்து செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். முழுமையாக குணமடைவது ஓரிரு நாட்களில் நடந்து விடாது. ஒரு வாரமும் ஆகலாம். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம். அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அவர் முழுமையான மயக்க நிலையில் இல்லை. மற்றவர்களை அடையாளம் காண்கிறார். எனதுஅம்மாவும் குணமடைந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.