கரூர் சம்பவத்தை பயமின்றி உரக்க பேச வேண்டும் - பி.சி.ஸ்ரீராம்

கரூர் சம்பவத்தில் யார் தவறு செய்தாலும் உண்மை வெளிவர வேண்டும் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்திய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உண்மை வெளியே வர வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உண்மை எங்கே இருக்கிறது. பேச்சு சுதந்திரம் இருக்கிறதா? உண்மை வெற்றி பெறும்போது மறைப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் காலம் கடந்து சென்ற பிறகு உண்மை சிதைந்துவிடும். கரூர் சம்பவத்தை பயமின்றி உரக்கப் பேச வேண்டும். யார் தவறு செய்தாலும் உண்மை வெளிவர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நாயகன், அலைபாயுதே, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்றியுள்ளார். இவர் 1992ம் ஆண்டில் 'மீரா' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'குருதிப்புனல்' திரைப்படம், ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. பி.சி.ஸ்ரீராம் ‘96’ இரண்டாம் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.






