கீ

கல்லூரி மாணவனாக துருதுருவென வருகிறார் ஜீவா. ஹேக் செய்யும் கொலை கும்பலை சாதுர்யமாக கண்டுபிடிக்கும் காட்சிகளில் பரபரக்க வைக்கிறார். படத்திற்கான சினிமா விமர்சனம்.
கீ
Published on

சாலை விபத்து என்ற பெயரில் நகரில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் ஒரு சைபர் கிரைம் கும்பல் இருப்பதையும், அவர்கள் தங்களுக்கு பலரை அடிமையாக்கி வேண்டாதவர்கள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்வதையும் பெண் பத்திரிகையாளர் வந்தனா கண்டு பிடிக்கிறார். ஆனாலும் குற்றவாளிகளை அவரால் நெருங்க முடியவில்லை. அப்போது பாட்சா என்ற வைரஸை கண்டுபிடித்து செல்போன் தகவல்களை திருடும் ஜீவாவுடன் நட்பு ஏற்படுகிறது. அவரை வைத்து கொலையாளிகள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். இதனால் அவரும் காரோடு ஆற்றில் தள்ளி கொல்லப்படுகிறார். அடுத்து ஜீவாவுக்கும் குறி வைக்கின்றனர். சக மாணவி நிக்கி கல்ராணியுடன் காதல், மோதல் என்று இந்த பயங்கரத்தை அறியாமல் ஜாலியாக திரிகிறார் ஜீவா. காரை ஏற்றி கொல்ல நடக்கும் முயற்சியில் ஜீவாவை காப்பாற்றும் அவரது தந்தை மரண படுக்கையாகிறார். அதன் பிறகு கொலை சதிதிட்டங்களையும், வந்தனா கொலை செய்யப்பட்டதையும் அறிந்து அதிர்ச்சியாகும் ஜீவா, சைபர் கிரைம் குற்றவாளிகளை அவர்கள் பாணியிலேயே கண்டுபிடித்து பழிதீர்க்கும் முயற்சியில் இறங்குவதும் அதில் வென்றாரா என்பதும் மீதி கதை.

கல்லூரி மாணவனாக துருதுருவென வருகிறார் ஜீவா. ஹேக் செய்யும் கொலை கும்பலை சாதுர்யமாக கண்டுபிடிக்கும் காட்சிகளில் பரபரக்க வைக்கிறார். கிளைமாக்சில் வில்லன்களுடன் மோதுவது விறுவிறுப்பு. தந்தை பாசத்தில் உருகி கண்ணீர் விட்டு நெகிழ வைக்கிறார். காதல் காட்சிகள் கலகலப்பானவை. நிக்கி கல்ராணி யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். அனைகா சோடி கவர்ச்சியில் தாராளம். சுஹாசினி சிறிது நேரம் வந்தாலும் அனுபவ நடிப்பால் கவர்கிறார். ராஜேந்திரபிரசாத் பாசமான அப்பா. ஆர்.ஜே.பாலாஜி சிரிக்க வைக்கிறார். கோவிந்த் பத்ம சூர்யா ஹைடெக் வில்லனாக மிரட்டுகிறார்.

கம்ப்யூட்டர், செல்போன் தகவல்களை திருடும் கும்பலின் ஆபத்துக்களை திகிலாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் காளஸ். குழந்தைகளை வைத்து காட்சிப்படுத்திய ஆபாசம், வன்முறைகளை தவிர்த்து இருக்கலாம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை அறிவியல் தொழில் நுட்ப கதைக்கு வலுசேர்த்துள்ளது. அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா காட்சிகளை அழகாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com