இரும்பு இதயங்களை கூட இளக வைக்கும் கதை - படம் ஒத்த செருப்பு விமர்சனம்

இது, வழக்கமான திரைப்படம் அல்ல. புதுமை விரும்பியான பார்த்திபன் (அவர் மட்டுமே) நடித்து, இயக்கியிருக்கும் படம். ஒத்த செருப்பு சினிமா விமர்சனம் பார்க்கலாம்.
இரும்பு இதயங்களை கூட இளக வைக்கும் கதை - படம் ஒத்த செருப்பு விமர்சனம்
Published on

ஒரு கொலை குற்றத்துக்காக பார்த்திபன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் உதவி கமிஷனர், துணை கமிஷனர், ஒரு பெண் மனநல மருத்துவர் ஆகியோர் விசாரணை நடத்துவது போல் படம் ஆரம்பிக்கிறது.

மாசிலாமணி (பார்த்திபன்) ஒரு கிளப்பில் காவல்காரராக இருக்கிறார். அவருக்கு உஷா என்ற அழகான மனைவியும், விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட மகனும் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில், பார்த்திபன் மனைவியின் அழகே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு இவர்கள் குடும்ப ஏழ்மை காரணமாகிறது.

பார்த்திபன் வேலை செய்யும் கிளப் செயலாளர் மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ள ஒரு ஆசாமி, உஷாவை அக்கா என்று அழைத்து வந்த ஒரு ஆட்டோ டிரைவர் ஆகியோர் அவர் குளிப்பது போல் வீடியோ படம் எடுத்து மிரட்டுகிறார்கள். தங்கள் ஆசைக்கு பணியாவிட்டால், அந்த வீடியோ படத்தை இணையதளத்துக்கு கொடுத்து விடுவதாக மிரட்டி, பாலியல் தாகத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

இந்த விவகாரம் பார்த்திபனுக்கு தெரியவருகிறது. மானமுள்ள ஒரு கணவன் என்ன செய்வானோ அதையே பார்த்திபனும் செய்கிறார். மனைவியை மிரட்டி பணியவைத்து செக்ஸ் உறவு கொண்ட அந்த கிளப் நிர்வாகிகள் இரண்டு பேர்களை கொலை செய்கிறார். கணவரின் கொலை வெறியை புரிந்து கொண்ட உஷா, ஆட்டோ டிரைவரை பயன்படுத்தி பார்த்திபனை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார்.

அதில் இருந்து பார்த்திபன் எப்படி தப்புகிறார்? துரோகம் செய்த மனைவியை அவர் என்ன செய்கிறார்? என்பது, கிளைமாக்ஸ்.

இரும்பு இதயங்களை கூட இளக வைக்கும் கதை. இதில், பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருக்கிறார். தொடர்பு இல்லாமல் பேசுவது, அவருடைய கதாபாத்திரத்தை ஒரு மனநோயாளி என்று புரியவைக்கிறது. கொலை செய்ததை முதலில் அவர் மறுப்பது, பின்னர், நான்தான் அந்த கொலையை செய்தேன் என்று ஆவேசமாக சொல்வது, மனைவியின் அழகை புகழ்வது, விசாரணை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டே வெளியில் இருக்கும் மகன் மீது பாசத்தை காட்டுவது, இடையிடையே அவருக்கே உரிய பாணியில், சிலேடையுடன் கூடிய வசனம் பேசி, ஹாஸ்யம் செய்வது ஆகிய காட்சிகள் மூலம் பார்த்திபனுக்குள் இருக்கும் சிறந்த நடிகர் வெளிப்படுகிறார்.

ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் நடிக்க வைத்து, முழு படத்தையும் ரசிக்க வைத்து இருப்பது, ஒத்த செருப்பு என்ற டைட்டிலுக்கு உயிர் கொடுத்து இருப்பது ஆகிய காட்சிகள், பார்த்திபனை சிறந்த டைரக்டர் ஆக அடையாளம் காட்டுகின்றன. படத்தின் முடிவைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

ஒரே ஒரு அறைக்குள் மட்டுமே நடக்கும் கதை என்பதால், ராம்ஜியின் ஒளிப்பதிவுக்கு அதிக வேலை இல்லை. சி.சத்யாவின் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது.

ஒத்த செருப்புக்கு நிறைய விருதுகள் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com