

பெங்களூரு:
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற 24 ஆயிரம் மாணவர்கள் நடப்பு ஆண்டு நடைபெற்ற நுழைவு தேர்விலும் கலந்து கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். அவர்கள் பி.யூ.சி.2-ம் ஆண்டில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் எடுக்க மாட்டோம் என்று அரசு அறிவித்தது. அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் அவர்களின் பி.யூ.சி. மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தினால் 1 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் கடந்த ஆண்டு பி.யூ.சி. தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் பெரும்பாலான மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல்
மதிப்பெண் எடுத்தனர். ஆனால் இந்த ஆண்டு பி.யூ.சி. தேர்வு
நடத்தப்பட்டது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.